மத்திய விமானப் போக்குவரத்து துறை, உடான் திட்டத்தின் கீழ் 71 புதிய விமான நிலையங்கள் மற்றும் 601 வழித்தடங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளதாக அறிவித்துள்ளது. பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கவும், வான்வழி போக்குவரத்தை விரிவுபடுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான போக்குவரத்து இல்லாத பகுதிகளில் விமானங்களை இயக்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக, விமானங்களை இயக்க விரும்பும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல சலுகைகளை வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் 601 விமான வழித்தடங்கள் மற்றும் 71 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.இதற்கான தகவல்களை, நேற்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதில் ஹெலிகாப்டர் வழித்தடம் உட்பட 601 வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.மொத்தமாக 86 விமான நிலையங்கள், அதில் 71 விமானங்கள் மற்றும் 13 ஹெலிகாப்டர் தளங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன் மூலம், ஆண்டுக்கு 2.8 லட்சம் விமானங்கள் மூலம் 1.44 கோடி பயணிகள் பயனடைய வாய்ப்பு உள்ளது.2014ம் ஆண்டில், நாடு முழுவதும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது இது இரட்டிப்பாக 157 ஆக உயர்ந்துள்ளது. 2047ம் ஆண்டுக்குள் 350 முதல் 400 விமான நிலையங்களை உருவாக்குவது மத்திய அரசின் இலக்காக உள்ளது.

