பண்டிகை காலங்களில் மதுரை மண்டலத்தில்தான் மது விற்பனை அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு சென்னை மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுக்கடைகளிலும் நாள்தோறும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. வார இறுதி நாட்களின் அது ரூ.200 கோடியாக அதிகரிக்கிறது. அதுவும் பண்டிகை நாட்கள் என்று வரும்போது, ஒரு நாள் விற்பனை ரூ.250 கோடியாக உயர்கிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 30-ஆம் தேதி ரூ.202 கோடியே 59 லட்சத்துக்கும், தீபாவளி நாளான 31-ஆம் தேதி ரூ.235 கோடியே 94 லட்சத்துக்கும் என 2 நாட்களும் சேர்த்து மொத்தம் ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.
வழக்கம்போலவே இந்த ஆண்டும் பிராண்டியே அதிகம் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அன்றைய தினமும், முந்தைய நாளும் சேர்த்து ரூ.467 கோடியே 63 லட்சத்துக்கு மது விற்பனையானது. அதை வைத்து பார்க்கும்போது இந்த ஆண்டு ரூ.29 கோடியே 10 லட்சம் அளவுக்கு மது விற்பனை குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 1,500 குறைந்தபோதும், மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்களுடன் கூடிய பார்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. எனவே, அங்கு விற்பனை அதிகரித்துள்ளதால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

