கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு உரையாற்றினார். ஆனால், அவர் பேசிக் கொண்டிருந்தபோது மாணவர்களில் ஒரு பிரிவினர் அவரது உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.கூகுள் நிறுவனம் சமீப காலமாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் குடியேற்றப் பிரிவுடன் தொழில்நுட்ப ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்களுக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள், சில தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்த சூழ்நிலையில்தான் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையாற்றியபோது, எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சில மாணவர்கள் அமைதியான முறையில் அரங்கை விட்டு வெளியேறினர். இருப்பினும், நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.செயற்கை நுண்ணறிவு (AI), தரவு பாதுகாப்பு மற்றும் அரசுகளுடன் தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்கள் குறித்து உலகளவில் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த மாணவர் வெளிநடப்பும் அதே விவாதத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு மற்றும் அரசுகளுடனான கூட்டாண்மை குறித்து மீண்டும் ஒரு முறை கேள்விகளை எழுப்பியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

