நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்டோர் உள்துறை அமைச்சரை வரவேற்றனர். பின்னர் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. ஹோட்டலுக்கு சென்ற அமைச்சர் அமித்ஷாவை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.
இதனை தொடர்ந்து அரசியல் சாராத பிரபலங்களுடன் அமைச்சர் அமித்ஷா சுமார் இரண்டரை மணிநேரம் ஆலோசனை நடத்தினார். திரைத்துறை, விளையாட்டு, கல்வி, மருத்துவம், தொழிலதிபர்கள் என பல்வேறு துறையை சேர்ந்த 24 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகரன், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன்நல்லி குப்புசாமி, வின் தொலைக்காட்சி தேவநாதன், விளையாட்டு துறையைச் சேர்ந்த லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணன், பாஸ்கரன், அனிதா பால்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொழில்துறையில் இருந்து இந்திய சிமெண்ட்ஸ், செட்டிநாடு சிமெண்ட்ஸ், தாஜ், ஆர்காட் நவாப், டேப்லட்ஸ் இந்தியா, பி.கே.எஃப் குழுமத்தினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
எஸ்.ஆர்.எம். குழுமத்தை சேர்ந்த பாரிவேந்தர் பச்சமுத்து, ரவி பச்சமுத்து, எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஐசரி கணேஷ், அப்பல்லோ மருத்துவ குழுமத்தில் இருந்து ப்ரீதா ரெட்டி, விஜயகுமார் ரெட்டி, ஜி.எஸ்.கே. வேலு உள்ளிட்டோர் அமித்ஷாவுடனான ஆலோசனையில் கலந்து கொண்டனர். பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சி குறித்து அவர்களிடம் பேசிய அமித்ஷா, தனித்தனியாகவும் பிரபலங்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, அரசியல் சாராத பிரபலங்களை அமித்ஷா சந்தித்து பேசியிருப்பது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் எண்ணங்களை தெரிந்துக் கொள்வதற்கு இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தென்சென்னை பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா இன்று கலந்துரையாடுகிறார். இந்த ஆலோசனைக்கு பின்னர், சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அமைச்சர் அமித்ஷா வேலூர் புறப்படுகிறார். வேலூரில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமித்ஷா சிறப்புரையாற்றுகிறார்.

