பிரான்சில் பிரதமர் மிஷெல் பார்னியேர் தலைமையிலான அரசு வீழ்ந்ததைத் தொடர்ந்து, புதிய அரசை அமைப்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. மிஷெல் பார்னியேர், தனது பட்ஜெட்டில் வரி விதிப்புகள் மற்றும் சலுகைக் குறைப்புகளை உள்ளடக்கியதாக, பிரான்ஸ் அரசியலமைப்பின் 49.3 வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி தாக்கல் செய்தார். ஆனால், உடனடியாக இடதுசாரி கட்சி France Unbowed (LFI) மற்றும் வலதுசாரி கட்சி National Rally (RN) ஆகியவை பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தன. இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பார்னியேர் தோல்வியடைந்ததால், பிரான்ஸ் அரசு வீழ்ந்தது.இந்நிலையில், புதிய அரசை உருவாக்குவதற்கான திட்டமிடலுக்காக, இன்று மதியம் 2.00 மணிக்கு, ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்ஸ் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளார். இதற்கான முக்கிய அம்சம் என்னவென்றால், பொதுவாக மேக்ரான் தனித்தனியாக கட்சித் தலைவர்களை சந்திப்பது வழக்கம். ஆனால், இம்முறை, அவர் அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒரே நேரத்தில் எலிசி மாளிகையில் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

