வரும் 31ம் தேதி மற்றும் ஜன1ம் தேதி கடலில் குளிக்கவோ, இறங்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் புத்தாண்டு தினம் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தலைமையில் 2025-ம்ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி பொதுமக்கள் அமைதியாகவும். பாதுகாப்பகாவும் புத்தாண்டு கொண்டாட இன்று (28.12.2024) காவல் ஆணையாளர் அலுவலகத்தில், காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் சென்னை பெருநகரில் பணிபுரியும் கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர். 31.12.2024 அன்று இரவு 9.00 மணியிலிருந்து காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், மற்றும் ஊர்க்காவல் படையினர் மூலம் கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக் கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வழக்குப் பதிவு செய்ய நேரிட்டால் பாஸ்போர்ட், வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளின் விண்ணப்பங்கள் போலீசாரால் சரிபார்ப்பு செய்யும்போது பாதிப்பு ஏற்படும் என்பதால் இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் (Police Assistant Booth) அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தவும். மெரினா. சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் உதவி மைய கூடாரங்கள் அமைத்தும் முக்கிய இடங்களில் Drone Cameraக்கள் மூலம் கண்காணித்து குற்றத் தடுப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

