சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங், பாலக் மற்றும் திவ்யா சுப்பராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி நூலிழையில் சீனாவிடம் தங்கப் பதக்கத்தை தவறவிட்டது. சீன அணி 1736 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், இந்திய அணி 1731 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும் வென்றது.
அதேபோல், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் 17 வயதான பாலக் தங்கப் பதக்கமும், 18 வயதான ஈஷா சிங் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வரி தோமர் வெள்ளிப் பதக்கம் வென்றார். நடப்பு ஆசிய போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இந்தியாவுக்கு 6 தங்கம் கிடைத்துள்ளது.
ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஷாகித் மைநேனி – ராம்குமார் ராமநாதன் ஜோடி, சீனா தைபேவை சேர்ந்த ஜங் ஜேசன் – ஷு யூ ஷியோ ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்ந்தது. இதனால் வெள்ளிப் பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது.
ஸ்குவாஷ் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கண்ணா மற்றும் அனஹத் சிங் அடங்கிய இந்திய அணி வீராங்கனைகள் வெண்கலம் வென்றது.
இதுவரை இந்தியா 8 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.