புத்தாண்டின் முதல் மாதத்திலேயே வானில் ஒரு அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்க போகும் அந்த நிகழ்வு என்ன தெரியுமா? வெள்ளி, சனி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் வானில் பிராகசமாக ஒரே நேர்க்கோட்டில் தோன்ற உள்ளன. மிகவும் அரிய நிகழ்வான இது, காண்பவரை நிச்சயம் அதிசயபட வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த கிரகங்கள் மாலை நேரம் வானத்தில் ஒரே நேர்க்கோட்டில் வரவுள்ளது. மேக மூட்டங்கள் இல்லாமல் தெளிவான வானம் இருந்தால், எவராலும் இந்த அற்புதமான காட்சியை பார்க்க முடியும்.
சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் (மார்ஸ்), ஜனவரி 15-16 அன்று மிகவும் பளிச்சென்று பிரகாசிக்க உள்ளது. இந்த சமயத்தில், செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் இருக்கும். இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு இவ்வாறு நிகழ்ந்தது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு செவ்வாய் கிரகம் கிழக்கில் உதயமாகும். அதேப்போல் சூரிய உதயத்தின் போது மேற்கில் மறையும். இரவு வானத்தின் முக்கிய அம்சமாக இது உள்ளது.
வெள்ளி (வீனஸ்) மற்றும் சனி (சாட்டர்ன்) கிரகமும் தங்கள் வசீகரப் காட்சியை தர உள்ளன. இந்த இரண்டு கிரகங்களும் தென்மேற்கு வானத்தில் நெருக்கமாகத் தோன்றும். முக்கியமாக ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இவை இரண்டும் மிக நெருக்கமான சீரமைப்பில் வரும். வெள்ளி மற்றும் சனி கிரகத்திற்கு இடையே மில்லியன் கணக்கான மைல்கள் தொலைவு இருந்தாலும், அவை இரண்டும் கிட்டத்தட்ட தொடுவது போல் நம் கண்களுக்கு இந்த நாட்களில் தோன்றும். பார்ப்பவர்களில் மனதை இது நிச்சயம் பரவசத்தை ஏற்படுத்தும். வெள்ளி பளிச்சென்று பிரகாசிக்க, சனியின் தங்கப் பளபளப்பு ஒரு அழகான மாறுபாட்டை வழங்குகிறது.
வியாழன் (ஜூபிடர்) வானத்தில் உயரமாக நம் கண்களுக்கு தெரியும். வியாழன் கிரகத்தின் பிராகசமான தன்மை, அதனை மாலை வானத்தின் முக்கிய அம்சமாக மாற்றும். இதன் எதிரே செவ்வாய் கிரகம் வரும் போது, அது வானத்தில் சூரியனுக்கு நேர் எதிரே அமைந்திருக்கும். இதன் காரணமாக மிகவும் பிரகாசமாகத் தோன்றும். முக்கியமாக ஜனவரி 13 அன்று, செவ்வாய் கிரகத்தின் முன் ஒரு முழு நிலவு கடந்து செல்லும். இந்த வானியல் நிகழ்வு கூடுதல் உற்சாகத்தை தருகிறது.
வானில் நடைபெறும் இந்த நிகழ்வைக் கவனிப்பதற்கான சரியான காலம் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி ஆகும். மற்ற பொருட்களிலிருந்து மிகக் குறைந்த ஒளி குறுக்கீடுகள் இருந்தால், முழு நிலவு மற்றும் நன்றாக புலப்படும் நான்கு கிரகங்கள் இரவு வானத்தில் மைய நிலையை எடுக்கும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களும் தொலைநோக்கி மூலம் கண்டறியும் தொலைவில் உள்ளன. இந்த அரிய கோள்களின் சீரமைப்பு, நமது சூரிய மண்டலத்தின் அதிசயங்களைக் காண வான் நோக்கர்களுக்கும் இளம் மாணவர்களுக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது.

