கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக் குறைவால் ஜூலை 21ம் தேதி காலமானார். அவருக்கு வயது 102. கடந்த 1923- ஆம் ஆண்டு அக்டோபர் 20- ஆம் தேதி கேரளா மாநிலம், ஆலப்புழாவில் ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த வி.எஸ்.அச்சுதானந்தன், சிறு வயதிலே பெற்றோர்களை இழந்தவர். வறுமையின் காரணமாக ஏழாவது வகுப்பிலே தனது பள்ளி படிப்பை முடித்துக் கொண்டு தொழிற்சங்கத்தில் இணைந்தார். கடந்த 1938- ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். பின் காங்கிரஸில் இருந்து வெளியேறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்தார். பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரிவின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்து கொண்டு அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 7 முறை கேரளா மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் 5 ஆண்டுகள் கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை கேரளா மாநில முதலமைச்சராகப் பதவி வகித்த வி.எஸ்.அச்சுதானந்தன், கேரளா மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தியதன் மூலம் கேரளா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அவர் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முதலமைச்சர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

