வளைகுடா, மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அவர்களில் கணிசமானோர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக துபாயில் ஏராளமான கேரள மக்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அங்கு வேலை செய்பவர்கள் பண்டிகை மற்றும் விடுமுறைக்காக கேரளாவிற்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள். அவர்களின் வசதிக்காக கேரளா-துபாய் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை செயல்படுத்த கேரளா அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கேரளா மாநில வெளிநாடு வாழ் மக்கள் அமைச்சகமும், தனியார் நிறுவனமான அனந்தபுரி ஷிப்பிங் அண்ட் லாஜிஸ்டிக் நிறுவனமும் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளன.
இதற்கான திட்டத்தை மத்திய அரசிடம் சமர்ப்பித்து விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. கேரளா அரசின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளின் கூட்டுக் கூட்டமும் நடைபெற்று முடிந்துள்ளது மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது. அனுமதி கிடைத்துவிட்டால் சோதனை ஓட்டம் நவம்பர் மாதம் நடைபெறும் என்றும், முழுமையான பயணிகள் போக்குவரத்து சேவை டிசம்பர் மாதம் தொடங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவின் கொச்சி, Beypore துறைமுகங்களில் இருந்து இந்த கப்பல் போக்குவரத்து இயக்கப்படும். அதே போல் மூன்றாவதாக விழிஞ்ஞம் துறைமுகத்தையும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள் இந்த கப்பலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரை கட்டணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல், ஒவ்வொரு பயணியும் தங்களுடன் 200 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லாம். இந்த கப்பலில் 1,250 பயணிகள் பயணிக்கலாம். இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் 4,000 கிலோ மீட்டர் தூரத்தை இந்தக் கப்பல் மூன்று நாட்களில் கடக்கும். இந்த கப்பலில் பயணிகளுக்காக அருமையான உணவுகள், நல்ல பொழுது போக்கு அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
