பீகார் மாநிலத்தில் பள்ளிகள் அருகில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் இயங்க தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை மாநில துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா அறிவித்தார். குழந்தைகளில் வன்முறை மனப்போக்கு உருவாகாமல் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அவர் விளக்கினார்.பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் இறைச்சி, மீன் ஆகியவை வெளிப்படையாக விற்கப்படுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட விற்பனை சிலரின் உணர்வுகளை பாதிக்கக்கூடும் என்றும், அந்த இடங்களின் தூய்மை மற்றும் புனிதத்தன்மையை கெடுக்கக்கூடும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.சுகாதாரம் மற்றும் பொது அமைதியை பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது யாருடைய உணவுப் பழக்கத்தில் தலையிடும் நடவடிக்கை அல்ல என்றும் துணை முதல்வர் கூறினார். சமூக நல்லிணக்கத்தையும் குழந்தைகளின் மனநலத்தையும் பாதுகாக்க மக்கள் இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.புதிய அரசின் இந்த நடவடிக்கை மாநிலத்தில் சுத்தம், ஒழுங்கு மற்றும் அமைதியை உறுதி செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

