தமிழக அரசியலில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தவெக ஆட்சியமைக்கும் முயற்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் D. ராஜா, “தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய தவெகவுக்கு ஆதரவு அளிக்கிறோம்” என்று தெரிவித்தார். இதற்கிடையில், சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான பாலன் இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடி.ஆர். நிர்மல்குமார் கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ராமச்சந்திரன் மற்றும் மாரிமுத்து ஆகிய 2 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், தற்போது தவெகவுக்கு மொத்தமாக 114 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உறுதியாகியுள்ளது. ஆட்சியமைக்க இன்னும் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இதற்குமுன், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடமும் தவெக ஆதரவு கோரியிருந்தது. இதுகுறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் M. A. பேபி, “தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டியது அவசியம்” என்று கூறினார். மேலும் அவர், “விஜய் தலைமையிலான தவெகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன், டி.ராஜா மற்றும் நானும் ஆலோசனை நடத்தியுள்ளோம். இன்று மாலைக்குள் முக்கிய முடிவு வெளியாகலாம்” என்றும் தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி, தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இரண்டு தொகுதிகளில் வென்றுள்ள விஜய் ஒரு இடத்தை ராஜினாமா செய்ய வேண்டியிருப்பதால் கட்சியின் பலம் 107 ஆக குறையும். அதனால் பெரும்பான்மைக்கு 117 உறுப்பினர்களின் ஆதரவு போதுமானதாக இருக்கும். காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு ஏற்கனவே உறுதியாகியுள்ளது. தற்போது விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவும் கிடைத்தால், தவெக சட்டப்பேரவையில் அறுதிப் பெரும்பான்மையை எளிதாக நிரூபிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அரசியல் வட்டாரங்களில், அடுத்த சில மணி நேரங்களில் தமிழக அரசியலில் பெரிய திருப்பம் ஏற்படலாம் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

