தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம் குறித்தும், புதிய ஆளுநர் நியமனம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை முடிந்த தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து ஆளுநராக முதலில் நியமனம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய பிறகு, தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டு மூன்று ஆண்டுகளைக் கடந்து பதவியில் உள்ளார். இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றப்பட்டு தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அதன்படி, முன்னாள் ராணுவ ஜெனரலும், முன்னாள் மத்திய அமைச்சருமான வி.கே. சிங் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் குமார் சிங் என்ற வி.கே.சிங், ராணுவத்தில் இருந்து அதன்பிறகு பாஜகவில் இணைந்தவர். 2021 சட்டசபைத் தேர்தலின் போது, மேலிடத்தின் தமிழக இணைப் பொறுப்பாளராக இருந்தார்.
மேலும், மக்களவைத் தேர்தலில் வேலூர், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றினார். இதனால், அவருக்கு தமிழகத்தின் கள அரசியல் தெரியும் என்பதாலும், வி.கே.சிங் பெயர் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன.

