ஆந்திரப் பிரதேசத்தில் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது என்று மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 2026–27 ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபோது இந்த முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். இன்றைய காலத்தில் குழந்தைகள் அதிக நேரம் மொபைல் மற்றும் சமூக ஊடகங்களில் செலவிடுவதால் அவர்களின் கல்வி, உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படுகின்றன என்ற கவலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும், சிறுவர்களை இணையத் தவறான உள்ளடக்கம், இணையதள மோசடி, மற்றும் சைபர் தொல்லைகள் போன்ற அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த தடை அமல்படுத்தப்பட்டால், பெற்றோர் மற்றும் பள்ளிகளும் குழந்தைகளின் இணைய பயன்பாட்டை கவனிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்காக தனி வழிகாட்டுதல்கள் மற்றும் கண்காணிப்பு முறைகளையும் மாநில அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்ல வளர்ச்சியை உறுதி செய்யும் முயற்சியாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.

