இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

அரசியல் இங்கிலாந்து உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளார். தொழிலாளர் கட்சிக்குள் எழுந்த அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜினாமா தொடர்பாக லண்டனின் 10 டவுனிங் தெருவில் ஸ்டார்மர் நிகழ்த்திய உரையில் கூறியுள்ளதாவது: அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்திச் செல்ல நான் ஏற்றவரா என்பதுதான் தற்போதைய கேள்வி. அந்தக் கேள்விக்கு எனது கட்சி அளித்த பதிலை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். நான் எடுத்த ஒவ்வொரு முடிவும், நாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதாகவே இருந்துள்ளது. அதனால் தான் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது முடிவு தொடர்பாக இன்று காலை மன்னரிடம் பேசினேன். அடுத்த செப்டம்பரில் நாடாளுமன்றம் மீண்டும் கூடுவதற்குள் ஒரு புதிய தலைவர் பதவியேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கட்சியின் செயற்குழுவை கேட்டுகொள்கிறேன். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நான் பிரதமர் பதவியில் நீடிப்பேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார். இங்கிலாந்து நாட்டில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சியானது கெய்ர் ஸ்டார்மரை பிரதமர் வேட்பாளராக கொண்டு தேர்தலை சந்தித்தது. தேர்தலில் தொழிலாளர் கட்சியானது 411 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்றார். தொடர்ச்சியான சர்ச்சைகள், கொள்கை மாற்றங்கள் மற்றும் சரிந்துவரும் மக்கள் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக, ஸ்டார்மரின் பதவி கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியான அழுத்தத்தில் இருந்து வந்தது. 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கிய தேர்தல் வாக்குறுத்திகளை ஸ்டார்மர் நிறைவேற்ற தவறிவிட்டதாக, தொழிலாளர் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *