இந்தியாவில் டிஜிட்டல் கைது போன்ற இணைய வழி மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு மேற்கொண்டுள்ளது. அதன் படி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து பல்வேறு மோசடிகளில் தொடர்புள்ள 3,962 ஸ்கைப் ஐடிகளையும் 83,867 வாட்ஸ்அப் கணக்குகளையும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் முடக்கியுள்ளது.
தொலைத்தொடர்புத் துறை, காவல்துறை மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் ஒருங்கிணைந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொபைல் மற்றும் நெட்வொர்க் பாதுகாப்பிலும் தொடர்ந்து இந்த நடவடிக்கை மூலம் தேசிய இணையக் குற்றப் புகாரளிப்பு வலைதளத்தால் (NCRP) அடையாளம் காணப்பட்ட 8.45 லட்சம் சிம் கார்டுகளும், 2.39 லட்சம் மொபைல் IMEI எண்களும் முடக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி 827 மொபைல் செயலிகளை முடக்கியதுடன், 1.11 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான இணைய உள்ளடக்கங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

