அழகர்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆடி தேரோட்டம்.

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் கோயில்கள் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள்

மதுரை அருகே உள்ள அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில், திருமாலிருஞ்சோலை மற்றும் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.இந்த ஆண்டுக்கான ஆடி பெருந்திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அன்னம், சிம்மம், அனுமன், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுந்தரராஜப் பெருமாள் தேவியர்களுடன் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 7.10 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடங்களை பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை இழுத்துச் சென்றனர். தேருக்கு முன்னும் பின்னும் பக்தர்கள் கைகளில் தடிகள் மற்றும் தீப்பந்தங்களை ஏந்தியபடி, உடலில் சந்தனம் பூசி சாமி ஆடியவாறு சென்றனர். பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து சென்ற திருத்தேர், நான்கு கோட்டை வாசல் ஆடி வீதிகள் வழியாக சென்று தனது நிலையை அடைந்தது.இதனைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேளதாளம் முழங்க சந்தனக் குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் சந்தனம் சாத்தினர். மேலும் பொங்கல் வைத்து, கிடா வெட்டி, அன்னதானம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் நெல், தானியங்கள், பணமுடிச்சுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கினர். மேலும், கோவில் பிரசாதமான சம்பா தோசையையும் பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.தேரோட்ட விழாவை காண மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகர்கோவிலுக்கு வருகை தந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *