மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23ம் தேதியான நேற்று 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலும், 29ம் தேதி மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் முதல்கட்டமாக 152 தொகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காக நேற்று காலை முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு மையங்களுக்கு சென்று வரிசையில் நின்றி வாக்களித்தனர்.
முதல்கட்ட தேர்தலில் வாக்களிக்க 3 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்று இருந்தனர். அவர்களில் 1 கோடியே 84 லட்சம் பேர் ஆண்கள், 1 கோடியே 75 லட்சம் பேர் பெண்கள், 465 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். தேர்தலில், 2 ஆயிரத்து 450 கம்பெனி (2 லட்சத்து 50 ஆயிரம்) துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே வாக்குச்சாவடிகளில் பெரும் கூட்டம் காணப்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டனர். இதனால் முதல்கட்ட தேர்தல் நடந்த தொகுதிகள் அனைத்திலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. இதனால் பிற்பகல் 3 மணியளவிலேயே 78 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அப்போது 92.72 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

