இந்தியா ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி அரையிறுதிக்கு முன்னேற்றம்

செய்திகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் முதன்மை செய்தி விளையாட்டு

இந்தியா, ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் மலேசியாவை வீழ்த்தி, இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. சீனாவின் ஹுலுன்பியுரில் நடைபெறும் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராப்பி ஹாக்கி தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன, இதில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் சீனாவை (3-0) மற்றும் ஜப்பானை (5-1) வீழ்த்தியுள்ளது. இந்திய அணி, நேற்று மூன்றாவது போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டது. போட்டி தொடங்கியதிலிருந்து இந்திய வீரர்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். 3வது நிமிடத்தில் ராஜ்குமார் முதல் கோலை அடித்தார், மேலும் 6வது நிமிடத்தில் இளம் வீரர் அராய்ஜீத் சிங் ஒரு கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் இந்தியாவுக்கு ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பு கிடைத்தது, இதனை ஜுக்ராஜ் சிங் வெற்றிகரமாக கோலாக மாற்றினார். முதல் 7 நிமிடத்தில் இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

22வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தனது பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். 25வது நிமிடத்தில் ராஜ்குமார் இரண்டாவது கோல் அடித்து, முதல் பாதியில் இந்திய அணி 5-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய ராஜ்குமார், 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார், இது ‘ஹாட்ரிக்’ கோலாக அமைந்தது. இதற்கிடையில், மலேசிய வீரர் அகிமுல்லா ஒரு கோல் அடித்து, தனது அணிக்கு ஆறுதல் அளித்தார்.இந்திய அணி 8-1 என்ற கணக்கில் இமாலய வெற்றியை பெற்றது. பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, 9 புள்ளிகளை பெற்றுள்ளது. 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று, தனது 4வது போட்டியில் இந்திய அணி தென் கொரியாவுடன் மோத உள்ளது, மேலும் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி 2-1 என ஜப்பானை வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *