மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. இந்த மோதல்களில் மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொல்கத்தா பெலேகாட்டாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஏஜென்ட் பிஸ்வஜித் பட்நாயக் மர்மமாக உயிரிழந்தார். நியூ டவுனில் பாஜக தொண்டர் மது மொண்டல் மோதலில் உயிரிழந்தார். உதயநாராயண்பூரில் பாஜக நிர்வாகி ஜாதவ் பார் அடித்து கொல்லப்பட்டார். நானூரில் திரிணாமுல் தொண்டர் அபீர் ஷேக் வெட்டிக்கொல்லப்பட்டார். பல இடங்களில் தீவைத்து தாக்குதல், மாணவர் மோதல்கள் நடந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த ராணுவப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன.இந்நிலையில் கொல்கத்தா நியூ மார்க்கெட் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகம் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வியாபாரிகள் பயந்து கடைகளை மூடி ஓடினர். இந்த சம்பவத்தை விமர்சித்த திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “பாஜகவினர் ஆட்சி மாற்றத்தை கொண்டாடுகிறார்கள்” எனக் கூறினார். கட்சியின் தலைவர் டெரிக் ஓ பிரையன், “போலீசார் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்தது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

