தமிழக அரசியல் சூழலில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் இந்த ஆதரவு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த முடிவின் மூலம், காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், கட்சித் தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. இதனால் தவெகவின் எம்எல்ஏ பலம் 107 ஆக குறையும். சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுவதால், தவெகவுக்கு இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியமாகிறது. தற்போது காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மீதமுள்ள ஆதரவை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

