மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான புதிய பாஜக அரசு பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், மாநிலத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அனைத்து சமூக நலத்திட்டங்களும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும், ஆனால் இறந்தவர்கள், சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்கள் மற்றும் இந்திய குடியுரிமை இல்லாதவர்கள் எந்த அரசு நலத்திட்டங்களையும் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். இதையடுத்து எஸ்ஐஆர் நடவடிக்கையின் கீழ் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், தங்களது பெயர் தவறாக நீக்கப்பட்டதாக கூறி தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தவர்களுக்கு இறுதி தீர்ப்பு வரும் வரை நலத்திட்டங்கள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள் அரசு திட்டங்களை தொடர்ந்து பெறலாம் என்றும், மாநிலத்தில் ரேஷன் அட்டைகள் மீண்டும் சரிபார்க்கப்படும் என்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அசோக் கீர்த்தனியா தெரிவித்துள்ளார். இதேபோல் பிஹாரிலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அங்கு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ரேஷன், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட எந்த அரசு சலுகையும் வழங்கப்படாது என்றும், அவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் பாஸ் புத்தகங்களும் உரிய நேரத்தில் ரத்து செய்யப்படும் என்றும் முதல்வர் சாம்ராட் சவுத்ரி தெரிவித்துள்ளார். மேலும், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு பிஹாரில் மட்டும் சுமார் 5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் அசோக் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

