வங்கதேசத்தில் 81 அடி உயர ராமர் சிலை அமைத்த இளைஞர் கைது.

இந்தியா சிறப்பு செய்திகள் போராட்டம்/ கலவரம் முதன்மை செய்தி

வங்கதேசத்தின் கைபந்தா மாவட்டம், பலாஷ்பாரி பகுதியில் 81 அடி உயர ராமர் சிலை அமைக்கும் பணியில் ஹரிதாஸ் என்பவர் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், பண மோசடி தொடர்பான வழக்கில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.ஹரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கதேச சிறுபான்மையினர் அமைப்புகள் தலைநகர் டாக்காவில் உள்ள பத்திரிகையாளர் மன்றம் முன்பு போராட்டம் நடத்தினர். ராமர் சிலை அமைக்கும் பணியை தடுக்கவே அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் அமைப்புகளின் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.வங்கதேச இந்து-பவுத்த-கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல சிறுபான்மையினர் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஹரிதாஸை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மணீந்திர குமார் நாத் கூறுகையில், ராமர் சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதற்காக ஹரிதாஸ் கைது செய்யப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், வங்கதேசத்தில் கடந்த சில ஆண்டுகளாக சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் கைது சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.இதற்கிடையில், ஹரிதாஸ் ரூ.9.35 கோடி மதிப்பிலான சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும், அவர் கடந்த 2010-ம் ஆண்டு இந்தியா சென்றதாகவும், 2019-ம் ஆண்டு மதம் மாறியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. சிறுபான்மை சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், தீவிரவாத சக்திகளை கட்டுப்படுத்த வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *