ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ‘தைஷோயின்’ பௌத்த கோயிலில் நேற்று ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் கோயிலின் ஒரு பகுதி முழுமையாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதற்கட்ட விசாரணையில், கோயிலில் கடந்த 1200 ஆண்டுகளாக அணையாமல் எரிந்து வந்த புனித ஜோதியே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த புனித தீயை கோபோ டைஷி என்ற ஆன்மீக குரு ஏற்றியதாக நம்பப்படுகிறது. அதன்பிறகு பல நூற்றாண்டுகளாக இந்த தீ தொடர்ந்து எரிந்து வந்ததாக கூறப்படுகிறது.மேலும், ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் உள்ள அமைதிச் சுடருக்கும் இந்த புனித ஜோதியே முக்கிய மூலமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.தீ விபத்தால் ரெய்காடோ மண்டபம் முழுவதுமாக சேதமடைந்தது. ஏற்கனவே 2005ஆம் ஆண்டிலும் இதே மண்டபம் தீயில் அழிந்த நிலையில், 2006ஆம் ஆண்டு பாரம்பரிய முறையில் மீண்டும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.தீ காட்டுப் பகுதிகளுக்கும் பரவியதால், தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழியாக தீ அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், கோயிலின் ஒரு முக்கிய பகுதி முழுமையாக அழிந்துவிட்டது.

