கொல்கத்தாவில் மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை அகற்றம்.

இந்தியா சிறப்பு செய்திகள் விளையாட்டு

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் லேக்டவுன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் 70 அடி உயர பிரம்மாண்ட சிலை அதிகாரிகளால் அகற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பலத்த காற்று வீசிய நிலையில், இரும்பு மற்றும் ஃபைபர் கிளாஸ் பொருட்களால் உருவாக்கப்பட்ட இந்த சிலை அதிகமாக அசைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பருவமழை காலத்தில் சிலை சேதமடைந்து பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். விஐபி சாலை அருகே உள்ள பாதசாரிகள் நடைபாதையின் மேல் அமைக்கப்பட்டிருந்த இந்த சிலை, ஹைட்ராலிக் கிரேன்கள் மற்றும் பொறியாளர்கள் குழுவின் உதவியுடன் பாதுகாப்பாக பிரித்து அகற்றப்பட்டது.இந்த சிலை, 2022 ஃபிஃபா உலகக் கோப்பையை கையில் ஏந்தி நிற்கும் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. கடந்த 2025 டிசம்பரில் மெஸ்ஸியின் இந்திய வருகையை முன்னிட்டு இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது சிலை அகற்றப்பட்டுள்ள சம்பவம் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், மெஸ்ஸியின் இந்திய பயணத்தின் போது ஏற்பட்ட நிர்வாக குறைபாடுகள் மற்றும் வன்முறை சம்பவங்களும் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *