மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் உள்ள ராணுவ தளம் மற்றும் பயணிகள் படகு மீது தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். வடக்கு மாலியில் நடந்த தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என மொத்தம் 64 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக மாலி அரசு கூறியுள்ளது. இதுகுறித்து மாலி அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘நைஜர் நதியில் பயணிகள் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பொதுமக்கள் 49 பேர் பலியாகினர்.
இரண்டாவதாக பம்பாவில் அமைந்துள்ள ராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மொத்தம் இதுவரை 64 பேர் பலியாகி உள்ளனர். தீவிரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்புடைய மற்றொரு தீவிரவாத அமைப்பு, இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்றுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.