தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு விரைவாகச் சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், மாவட்ட அளவில் நடைபெறும் திட்டப் பணிகளை கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலும் அரசு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.ஏற்கனவே இயற்கைச் சீற்றங்கள், நோய்த்தொற்றுகள் மற்றும் பிற அவசரகால சூழ்நிலைகளில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து விரைவுபடுத்துவதற்காக, இந்திய ஆட்சிப் பணி (IAS) அலுவலர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த கண்காணிப்பு முறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போது அமைச்சர்களையும் நேரடியாக இந்தப் பணிகளில் ஈடுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, மாநிலத்தின் அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் தனித்தனியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த பொறுப்பு அமைச்சர்கள் தங்களுக்குக் ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவுபடுத்துதல், அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் இயற்கை பேரிடர், நோய்த்தொற்று உள்ளிட்ட அவசரகால சூழ்நிலைகளில் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பணிகளை கவனிப்பார்கள்.மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, மக்கள் நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுவதற்காக இந்த புதிய ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் மாவட்ட வளர்ச்சி பணிகள் மேலும் வேகமடைந்து, பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

