இந்தியாவில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு நாடு முழுவதும் 5 லட்சத்து 13,563 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 1 லட்சத்து 83,382 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, தினமும் சராசரியாக 502 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் நிலை உள்ளது.இதனைத் தடுக்க, வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ‘V2V’ (Vehicle-to-Vehicle) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு விதிகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி, 2027ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தயாரிக்கப்படும் L, M மற்றும் N வகை புதிய வாகனங்களில் V2V வசதியை கட்டாயமாக பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எந்தெந்த வாகனங்களுக்கு இந்த வசதி பொருந்தும்?🔹 L வகை: இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் – மொபெட், பைக், ஸ்கூட்டர், ஆட்டோ உள்ளிட்டவை.🔹 M வகை: பயணிகள் வாகனங்கள் – கார், ஜீப், வேன், பேருந்து உள்ளிட்டவை.🔹 N வகை: சரக்கு வாகனங்கள் – டெம்போ, பிக்கப் வாகனம், லாரி, டிரக் உள்ளிட்டவை.மற்ற வகை வாகனங்களுக்கு இந்த வசதி கட்டாயமாக்கப்படவில்லை.V2V தொழில்நுட்பத்தின் முக்கிய பயன்கள். விபத்து அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை: ஒரு வாகனம் பயணிக்கும்போது, அருகில் உள்ள வாகனங்களுடன் தானாகவே தகவல்களை பரிமாறிக்கொள்ளும். இதன் மூலம் அருகில் உள்ள வாகனத்தின் வேகம் மற்றும் அதன் தூரம் குறித்து ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை கிடைக்கும்.⛰️ வளைவுகளில் பாதுகாப்பு: மலைப்பாதைகளில் உள்ள ஆபத்தான ஹேர்பின் வளைவுகள் மற்றும் மூடுபனி நிலவும் பகுதிகளில் எதிரே அல்லது பின்னால் வரும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கை வழங்கும்.
போக்குவரத்து நெரிசல் குறைப்பு: வாகனங்கள் சீரான இடைவெளியில் பயணிக்க உதவுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். சிம் கார்டு தேவையில்லை!V2V தொழில்நுட்பம் வாகனங்கள் ஒன்றுக்கொன்று நேரடியாக வயர்லெஸ் முறையில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும். இதற்கு சிம் கார்டு அல்லது மொபைல் நெட்வொர்க் தேவையில்லை.இந்த தொழில்நுட்பம் 5.875 முதல் 5.905 GHz வரையிலான அலைவரிசையில் செயல்படும். இதற்காக 30 MHz ஸ்பெக்ட்ரத்தை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது.இதற்கான வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். கருத்துகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திற்கு அஞ்சல் மூலமாகவும், comments-morth@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

