பிரான்ஸில் வன்முறை அதிகரித்தையடுத்து வன்முறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் பெற்றோர்களின் உதவியை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாடியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகர் அருகே நான்டர் எனும் இடம் உள்ளது. இங்கு அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த 17 வயது நிரம்பிய நேல் என்ற சிறுவன் கார் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த சிறுவன் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சிறுவன் நேல் பலியானான்.
இந்த சம்பவம் பிரான்ஸ் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போலீசாருக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். நாட்டின் பல இடங்களில் மக்கள் போராடட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்கள், போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. பொதுமக்கள், போலீசார், பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பிரான்சில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாரிஸ் நகரைச் சுற்றியுள்ள மாசேய்லே, லியோன், பாவ், டௌலவ்ஸ், லில்லே உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் ஏற்பட்டு வருகிறது.
வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தனது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தீவிர ஆலோசனை நடத்திய நிலையில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தினார். பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். எனினும் வன்முறை மட்டும் கட்டுக்குள் வந்த பாடில்லை.
கலவரம் தீவிரமடைந்ததை தொடர்ந்து சுமார் 45 ஆயிரம் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுவன் சுடடுக்கொல்லப்பட்டதால் ஏற்பட்ட இந்த வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமான போலீசார் காயமடைந்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டதாக 875 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

