சபரிமலை ஐயப்பன் கோயிலில் 55.72 சவரன் எடையுள்ள தங்கக் கிரீடம் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட இந்தக் கிரீடம் சன்னிதானத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்ததாக பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற திருவாபரணங்களின் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பின்போது, அங்கு இருந்த கிரீடம் குறித்து சந்தேகம் எழுந்ததாகவும், அசல் கிரீடத்துக்குப் பதிலாக போலி கிரீடம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. சுமார் 445.76 கிராம் எடையுள்ள அசல் கிரீடத்திற்கு பதிலாக குறைந்த எடையுள்ள மாதிரி கிரீடம் இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கிரீடம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் CCTV கண்காணிப்பு இல்லாததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தங்கக் கிரீடம் பாதுகாப்பாக இருப்பதாக திருவாபரண ஆணையர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

