கோழி இறைச்சி விற்பனை நிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ்

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூலை 31) நடைபெற இருந்த கோழி இறைச்சி விற்பனை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு முன்பு, அவற்றுக்கு தீவனம் வழங்குவதால் எடை செயற்கையாக அதிகரிப்பதாக கோழி வணிகர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது. இதைத் தடுக்க, கோழிகளை இறைச்சிக்காக அனுப்புவதற்கு 8 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பாக தீவனக் கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இதுதொடர்பாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில், ஜூலை 31ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோழி இறைச்சி விற்பனையை நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவினர் தீவனக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதாகவும், இறைச்சிக்காக கோழிகளை அனுப்பும்போது அவற்றுக்கு தீவனம் வழங்காமல் அனுப்புவதாகவும் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.இதனை ஏற்றுக்கொண்ட கோழி வணிகர்கள் கூட்டமைப்பு, இன்று முதல் நடைபெற இருந்த கோழி இறைச்சி விற்பனை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளது.போராட்டத்தால் பொதுமக்கள் மற்றும் கோழி இறைச்சி விற்பனையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் துரைராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *