கடந்த ஆண்டை போன்று, நடப்பாண்டும் தீபாவளி பண்டிகைக்காக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலை, கல்வி உள்ளிட்டவற்றிற்காக சொந்த ஊரை விட்டு சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருக்கும் மக்கள், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின்போது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். அப்போது ரயில் நிலையங்களும், பேருந்து நிலையங்களும் கூட்ட நெரிசலில் திண்டாடும். சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்படும்.
இந்த ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை அதாவது, வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து வரும் 28-ஆம் தேதி போக்குவரத்து துறை செயலாளர், மண்டல மேலாண் இயக்குநர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்த உள்ளார். அன்றைய தினமே சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை, மாதவரம், தாம்பரம், கோயம்பேடு, கே.கே.நகர் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து வெளியூர்களுக்கு தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.