‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு சுட்டுப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் மற்றும் மூலப்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.ஏகே-203 தாக்குதல் துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரிக்கும் நோக்கில், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் இந்தோ-ரஷ்யன் ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் (IRRPL) என்ற இந்தியா-ரஷ்யா கூட்டு நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் ஆலையில்தான் தற்போது ‘ஷெர்’ என பெயரிடப்பட்ட ஏகே-203 துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.IRRPL தலைமைச் செயல் அதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்.கே. சர்மா வெளியிட்ட தகவலில், 100 சதவீதம் இந்திய உதிரி பாகங்கள் மற்றும் உள்நாட்டு மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கியை வெற்றிகரமாக தயாரித்து சுட்டுப் பரிசோதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது நிறுவனத்தில் பணியாற்றும் அனைவருக்கும் பெருமைமிக்க தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அடுத்த கட்டமாக, இந்திய ராணுவத்தின் பரிசோதனைக்காக தேவையான எண்ணிக்கையில் துப்பாக்கிகளை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த துப்பாக்கிகள் செப்டம்பர் 2026-ல் ராணுவத்தின் சோதனைக்காக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏகே-203 என்பது 7.62×39 மிமீ அளவிலான குண்டுகளை பயன்படுத்தும் கலஷ்நிகோவ் துப்பாக்கி தளத்தை அடிப்படையாகக் கொண்ட தாக்குதல் துப்பாக்கியாகும். இது நிமிடத்திற்கு சுமார் 700 சுற்றுகள் வரை சுடும் திறன் கொண்டது. மேலும், சுமார் 800 மீட்டர் வரை தாக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

