கேரளத்தின் முக்கிய பண்டிகை ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது

இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

திருவோணம் என்பது இருபத்தேழு நட்சத்திரங்களில் மிகவும் மங்கள கரமான நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. இது மகாவிஷ்ணுவின் திரு நட்சத்திரம். அதனால் பெருமாள் நட்சத்திரம் என்றே பக்தர்கள் போற்று கின்றனர். திருவோணத்தான் என்று பெருமாளை ஆழ்வார்கள் கொண்டாடுவார்கள். ஆவணி மாத திருவோணத்தில்தான் மகாவிஷ்ணு வாமன அவதாரமாகவும் பின்னர் திருவிக்ரமனாகவும் உலகைக் காத்தார். ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நாளில் (ச்ரவண விரதம்) பலர் விரதம் இருந்து பெருமாளை வழிபடுகின்றனர். ஆனால் ஆவணி மாத திருவோணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் திருப்பதியில் திருமலை திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு (பெருமாளின் அவதாரம் புரட்டாசி திருவோணம்) சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், உற்சவங்கள் நடைபெறும். அதேபோல் ஒப்பிலியப்பன் கோயில் திருத்தலத்தில் திருவோண நட்சத்திரம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அங்கு மாதந்தோறும் திருவோண உற்சவமும், ஆவணி மாதத்தில் வாமன ஜெயந்தி விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. ஹயக்ரீவர் நட்சத்திரமும் திருவோணம்தான். இந்த ஆவணி திருவோண நாளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டைச் சுத்தம் செய்து கோலம் போட வேண்டும். பெருமாள் படத்திற்கு அல்லது விக்ரகத்திற்கு துளசி மாலை, தாமரை அல்லது மணமுள்ள மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். சாத்துவிக உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். பலர் உபவாசமாக இருந்து மாலை பூஜைக்குப் பிறகு பிரசாதம் அருந்துவார்கள். ஓம் நமோ நாராயணாய’’, விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீசூக்தம், புருஷசூக்தம், திருப்பாவை, பெரியாழ்வார் திருமொழி, நம்மாழ்வார் பாசுரங்கள், வாமன அவதாரத்தைப் போற்றும் பகுதிகளைப் பாராயணம் செய்யலாம். துளசி அர்ச்சனை செய்து, இயன்றளவு அன்னதானம் அல்லது தானம் செய்வது மிகவும் சிறப்பானது. மாலை நேரத்தில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று திருவோண நட்சத்திர வழிபாட்டில் கலந்து கொண்டு பெருமாளின் திருவடிகளைத் தரிசிக்க வேண்டும். ஆவணி திருவோணத்தில் பக்தியுடன் விரதம் இருந்து வாமன திரு விக்ரமனை வழிபடுபவர்களுக்கு அகந்தை நீங்கி ஞானம் பெருகும். குடும்பத்தில் ஐஸ்வர்யம், ஆரோக்கியம், ஒற்றுமை, மன அமைதி, இறையருள் ஆகியவை பெருகும். ஓணம் பண்டிகை பழமையான பண்டிகை. திருமழிசை ஆழ்வார்ஓணப் பெருவிழாவின் ஒலி அதிர’’ என்று இந்த பண்டிகையின் சிறப்பைப் பாடி இருக்கின்றார். பெரியாழ்வாரும் தம்முடைய திருப் பல்லாண்டு பாசுரத்தில் “எந்தை தந்தை தந்தை தன் மூத்தப்பன் ஏழ்படி கால் தொடங்கி வந்து வழிவழியாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழாவில்’’ என்று பாடியதால் தமிழகத்தில் திருவோணப் பெருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வந்ததை அறிகிறோம். வாமன அவதார ஜெயந்தி விழா இது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் தனித்துவம் பெற்றது. முதலில், குள்ளமான பிரம்மச்சாரி வடிவில் வாமனராக மகாபலியிடம் மூன்று அடி நிலம் கேட்டார். பின்னர் விஸ்வரூபம் எடுத்து திருவிக்ரமனாக மாறி, ஒரு அடியால் பூமியையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தார். மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனுக்கு அருளைப் புரிந்தார். அதனால் இது கருணையும் நீதியும் இணைந்த அவதாரமாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *