ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா நேரடி ராணுவத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் சவுதி அரேபியா கவலை அடைந்துள்ளது. குறிப்பாக செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டப் கடல்வழிப் பாதையில் செல்லும் கப்பல்களுக்கு ஹவுதிகளால் ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த சூழலில், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அதிபர் டிரம்பை இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஹவுதிகளுக்கு எதிராக உடனடியாக அமெரிக்க ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால், ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்கா நேரடியாக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட தற்போதைக்கு திட்டமிடவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலாக சவுதி அரேபியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவை மேலும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையே, அமெரிக்க மத்திய கிழக்கு ராணுவப் படைப்பிரிவின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், அவசர ஆலோசனைகளுக்காக சவுதி அரேபியா சென்றுள்ளார். இந்த சந்திப்பில் ஹவுதிகளின் அச்சுறுத்தல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

