2023ல் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை வெளியிட்டது மத்திய அமைச்சகம்; உலகின் 75% புலிகள் இந்தியாவில் இருப்பதாக தகவல்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வனவிலங்குகள் விவசாயம்

இந்தியாவில் தற்போது உலக காட்டுப் புலிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 75% உள்ளதாகவும், இதில் தமிழ்நாட்டில் 306 புலிகள் இருப்பதாகவும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
1973 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும் ’புராஜெக்ட் டைகர்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த ஐம்பது ஆண்டுகளில், புலிகள் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை செய்து, புராஜெக்ட் டைகர் தற்போது பாராட்டத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் தற்போது உலக காட்டுப் புலிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 75% உள்ளது. 1970-ம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பின் முதல் கட்டமாக இந்திய அரசாங்கம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்றுவது மற்றும் வெப்பமண்டல காடுகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அமைப்பதில் கவனம் செலுத்தியது. இருப்பினும், 1980-ம் ஆண்டு வரை வேட்டையாடுதல் போன்ற காரணிகளால் இந்த திட்டம் சரிவை கண்டது.
பின்னர் 2005-ம் ஆண்டில் இரண்டாம் கட்ட திட்டங்களை அரசு செயல்படுத்தியது. புலிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியது. இந்த அணுகுமுறை புலிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
இன்று உலக புலிகள் தினத்தை கொண்டாடும் விதமாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்ததாவது “இந்தியாவில் தற்போது உலக காட்டுப் புலிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 75% உள்ளது. இதில் 785 புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ளன.
அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 563 புலிகளும், உத்தரகண்டில் 560 புலிகளும், மற்றும் மகாராஷ்டிராவில் 444 புலிகளும் உள்ளன. தேசிய பூங்காக்கள் அமைந்துள்ள ஜிம் கார்பெட் பகுதியில் 260 புலிகளும், பந்திப்பூரில் 150 புலிகளும், நாகர்கோவிலில் 141 புலிகளும், பாந்தவ்கரில் 135 புலிகளும், துத்வாவில் 135 புலிகளும் உள்ளன.
இதேபோல் முதுமலை தேசிய பூங்காவில் 114 புலிகளும், கன்ஹாவில் 105 புலிகளும், காசிரங்காவில் 104 புலிகளும் உள்ளன. மேலும் சுந்தரவனத்தில் 100 புலிகளும், தடோபாவில் 97 புலிகளும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 85 புலிகளும் மற்றும் மத்திய பிரதேசம் பென்ச் பகுதியில் 77 புலிகளும் உள்ளன” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டு 264ஆக இருந்தது.
ஆனால் 2022-ம் ஆண்டு 306 ஆக உயர்ந்துள்ளது. இந்த சாதனையை சாத்தியமாக்கிய அனைத்து வனத்துறையினர் மனமார்ந்த பாராட்டுக்கள். புலிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தமிழ்நாடு அரசு பெரிய மற்றும் தைரியமான நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *