மிதக்கும் வெனிஸ் நகரத்தில் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் திருமணம் நடந்தது. லாரன் சான்செஸ் என்ற முன்னாள் டிவி நிருபரை கரம் பிடித்தார். உலகின் பெரும் கோடீஸ்வரரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் திருமணக் கொண்டாட்டங்களால், இத்தாலியின் புகழ்பெற்ற வெனிஸ் நகரம் ஒருபுறம் களைகட்டியிருந்தாலும், மறுபுறம் கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்தது. பதாகைகளை ஏந்தியும், நகரின் முக்கிய இடங்களில் நியான் விளக்குகளில் எதிர்ப்பு வாசகங்களை ஒளிரச் செய்தும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (61) – முன்னாள் தொலைக்காட்சி செய்தியாளர் லாரன் சான்செஸ் (55) ஆகியோரின் திருமணம், நேற்று வெனிஸில் உள்ள சான் ஜார்ஜியோ மேஜியோரே தீவில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தேறியது. கிம் கர்தாஷியன், ஓப்ரா வின்ஃப்ரே, ஆர்லாண்டோ ப்ளூம், அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், ஜோர்டான் ராணி ரானியா உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவில், புகழ்பெற்ற ஓபரா பாடகர் ஆண்ட்ரியா போசெல்லியின் மகன் மேட்டியோ போசெல்லி இசை நிகழ்ச்சி நடத்தினார். திருமணத்திற்குப் பிறகு, லாரன் சான்செஸ் தனது இன்ஸ்டாகிராம் பெயரை ‘லாரன்சான் செஸ்பெசோஸ்’ என மாற்றி, திருமணப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தத் திருமணத்திற்காக வெனிஸ் நகரத்திற்கு ஜெப் பெசோஸ் சுமார் 3.5 மில்லியன் டாலர் நன்கொடை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

