ஏற்காடு 11-வது கொண்டை ஊசி மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாகவும், விடுமுறையின் காரணமாகவும் சுற்றுலா பயணிகளை பொறுத்தவரையில் கோடைவாசஸ்தளங்களை நாடி வருகின்றனர். அந்த வகையில் ஏற்காட்டிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். இதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன.இந்த நிலையில், இன்று மாலை ஏற்காட்டில் இருந்து தனியார் பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது மலை பாதையில் 11-வது கொண்டைஊசி வளைவு பகுதியில் திடீரென நிலைதடுமாறி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர். தொடர்ந்து ஒரு சிறுவன், 3 ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக தகவலறிந்து வந்த ஏற்காடு போலீசார், தீயணைப்புதுறையினர் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிரிந்தா தேவி ஆகியோர் விபத்து நிகழ்ந்த இடத்திற்க்கு சென்று 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களை வரவழைத்து படுகாயமடைந்த அனைவரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து 45 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.