சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய ஆட்சி அமைந்ததிலிருந்து , தமிழகத்தில் பல ஆரோக்கியமான அரசியல் நிகழ்வுகளைக் காண முடிகிறது.
இப்பெரும் நோய்த்தொற்று காலத்தை கருத்தில்கொண்டு, பதவி ஏற்பு விழா விமரிசையாக நடத்தபடாதது, விழாக்களில் வைக்கப்படும் பதாகைகளை தவிர்க்க அறிவுறுத்தியது, அரசு நலத் திட்டங்களில் தனிநபர் பெயர்,புகைப்படங்களை தவிர்ப்பது, முதல் அமைச்சர் உட்பட அமைச்சர்களின் களப்பணிகள் போன்ற நடவடிக்கைகள் குறிப்பிடதக்கவை.
இது கட்சி பேதம் கடந்து அனைத்து தரப்பினரும் வரவேற்கதக்கதாக, பெரும் நம்பிக்கை தரக் கூடியதாய் இருக்கிறது.
குறிப்பாக ஆட்சி மாறியதும் கடந்த காலங்களைப் பற்றிய புகார் பட்டியல்களை வாசித்து நேர விரயம் செய்யாமல், திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்ய முற்படாமல்,சூழலைப் புரிந்துகொண்டு ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுப்பது,அனைத்துக்கட்சி தரப்பிலும் ஆலோசனைகளை கேட்பது போன்றவை தமிழக அரசியலில் புதிய அத்தியாயமாக இருக்கிறது.
“அரசியல் என்பது ஒரு சாக்கடை, இங்கு யார் வந்தாலும் மக்களுக்கு நல்லது நடக்காது “போன்று அரசியலை வெறுத்து ,அந்நியப்பட்டு போக செய்யும் ஆபத்தான பொது மனப்பான்மையை மாற்ற இதுபோன்ற செயல்பாடுகள் பெரும் பங்காற்றும்.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் அனைத்து பேதங்களையும் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு நிற்பதே பலம். அதுவே அசாதாரண சுழல்களில் இருந்து மீண்டு வருவதற்கான வழியை எளிதாக்கும்.இது போன்ற ஆரோக்கியமான அரசியல் செயல்பாடுகள் எல்லாக் காலங்களிலும் தொடர வேண்டும் என்பதே அனைத்துதரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
- அரவிந்த் ரகு