எழுத்து வெறும் கற்றறிந்தவர்களுக்கானது மட்டுமல்ல, இலக்கியம் மெத்தப் படித்தவர்களுக்கானது மட்டுமல்ல, இவ்விரண்டும் அனைவருக்கும் பொதுவானது. சிறிது ஆர்வமும், நிறைய ஆசையும், அனுபவங்களும் கூடவே விடாமுயற்சியும். இது தான், தன் பள்ளிப்படிப்பை ஏழாம் வகுப்பிலேயே கைவிட்டிருந்த ஒரு மிகச்சாதாரண விவசாயி, கரிசல் இலக்கியங்களின் கதாநாயகன் ஆன கதை.
எழுத்துலகில் கி.ரா என்றறியப்படும் கி.ராஜநாராயணன், 1923 ஆம் ஆண்டு, கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் என்னும் கிராமத்தில் பிறந்தார். கரிசல் காட்டில் பிறந்திருந்ததாலோ என்னவோ, அவரின் கதைகள் பெரும்பாலும் கரிசல் மாந்தர்களைச் சுற்றியே அமைந்திருந்தது. கரிசல் மக்களின் வாழ்வியல், அவர்களின் சுகங்கள், சோகங்கள், அவர்களின் மொழி வழக்குகள், கொண்டாட்டங்கள், வழக்கங்கள், வறுமை ஆகியவற்றை அதன் தன்மை மாறாது எழுத்துக்களாய் மாற்றி அனைவர் மனதையும் கவர்ந்திழுத்தார். காய்ந்துக் கிடந்த கரிசல் பூமியிலும் கூட செழிப்பான கதைகளை உருவாக்கித் தந்தார்.
தனது முப்பதாவது வயதில் தான் தன் எழுத்துலக வாழ்க்கையை தொடங்கினார் கி.ரா. அதுவரையில் அவர் அந்த எழுத்துக்களுக்கான அடித்தளமாய் அனுபவங்களைக் கதைகளாக்கிச் சேர்த்திருப்பார் என்றே எண்ணுகிறேன்.
அவரின் நாவலான “கோபல்லபுரத்து மக்கள்”, இடம்பெயர்ந்து வந்த தெலுங்கு பேசும் மக்களின் வாழ்வியலைச் சொல்லி சாகித்ய அகாடெமி விருது பெற்றது. ஏழாம் வகுப்பைக் கூட முழுதாய் முடித்திருக்காத கி.ரா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாட்டுபுற கதைகள் பிரிவின் பேராசிரியராயும், சாகித்ய அகாடெமியின் விருது ஆலோசனைக் குழுவிலும் பணி புரிந்துள்ளார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக, பல நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து ” நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்” என்னும் திரட்டை வெளியிட்டுள்ளார். தன் இறுதி மூச்சு வரை சிறந்தவொரு வாசிப்பாளனாகவே இருந்து வந்த கி.ரா ” சொல்லப்படும் கதைகள் பதிவு செய்யப்படல் வேண்டும், காரணம் நாட்டுப்புற கதைகளின் அழகு அதை சொல்லும் விதத்தில் தான், எழுத்தால் அதனை முழுதும் உணர வைத்திட முடியாது” என்னும் கருத்தை மிக ஆழமாய் நம்பியிருந்தார்.
மக்களால் பேசப்படும் வழக்குமொழியே உண்மையான மொழி என்று கூறும் கி.ரா, அவரின் வட்டார வழக்கான கரிசல் மொழியையும், அதன் சொற்களையும் தன் கதைகள் மூலம் உலகறியச் செய்தார். அவரின் கிடை என்னும் நாவல் “ஒருத்தி” என்னும் பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.
மண் மணக்கும் எழுத்துக்களை நமக்காய் அளித்திருந்த கி.ரா நேற்று மாலை உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நம்மை விட்டு நீங்கி இறைவனடி சேர்ந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படல் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கி.ரா அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின், அவரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். அன்னாரது இறுதி சடங்கு நாளை அவர் பிறந்த ஊரான இடைசெவலில் நடைபெறுகிறது.
நம்மை, நம்மைப் போன்ற சக மனிதர்களை, அவர்களின் கதைகளை எழுதிய அய்யா கி.ரா என்றும் நம்முடனே வாழ்வார், தன் கதைகளின் மூலமாய்.
- சந்தீப் குமார்