கவலையூட்டும் கருப்புப் பூஞ்சை

ஆரோக்கியம் செய்திகள்

பெருகி வரும் கொரோனா தொற்றினால் மக்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், கொரோனா பாதித்து அதற்கான சிகிச்சையில் இருப்பவர்களையும், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களையும், “ம்யூகோர்மைக்கோசிஸ்” எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாய் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது 50% மரண விகிதத்தைக் கொண்ட ஒரு கொடிய நோயாகும். இது வரையில் ஐம்பது முதல் தொண்ணூறு நபர்கள் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் கொரோனா நோய் பாதிப்பிலிருந்து மீண்டு 10 முதல் 14 நாட்கள் வரை ஆனவர்கள் எனவும் அதிர்ச்சித் தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ம்யூகோர் மோல்ட் எனப்படும் ஒருவகை பூஞ்சையால் உருவாகும் இந்த நோய், நம் மூச்சுக் குழாய், நுரையீரல், மூளை போன்ற உறுப்புகளைப் பாதித்து மரணத்தை ஏற்படுத்துகிறது. கருப்புப் பூஞ்சை எனப்படும் இவ்வகை பூஞ்சை மண்ணிலும், உரத்திலும், அழுகும் காய்கறிகளிலும் அதிகளவில் காணப்பட்டாலும், இதுவரையில் இதன் மூலமாய் தொற்று அரிதாயே ஏற்பட்டு வந்திருந்தது.

இந்தக் கருப்புப் பூஞ்சை நோயானது, நோயெதிர்ப்பு சக்தி குறைந்த மற்றும் நீரிழிவு நோயாளிகளை வெகு எளிதில் தாக்குகிறது. காற்று மூலமாய் உள்நுழையும் இது நுரையீரல், தாடை, கண் வழியாக பரவி மூளை வரை பாதிக்கிறது. இந்த நோய்த் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டவர்களில் நோயின் தாக்கம் மூளைக்குப் பரவாமல் தடுக்க ஒரு சிலருக்கு ஒரு கண்ணும், மற்ற சிலருக்கு இரண்டு கண்களும், ஒரு நபருக்கு கீழ் தாடையும் அறுவைச் சிகிச்சை மூலமாய் நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாய் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு நுரையீரல் வீக்கத்தைக் குறைக்க அளிக்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகள் இந்தப் பூஞ்சையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாய் மருத்துவர்கள் கருதுகின்றனர்.

கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டால் மூக்கிலிருந்து கருப்பு நிற திரவம் மற்றும் இரத்தம் வெளியேறுதல், கண்பார்வைக் குறைபாடு, பார்வையிழத்தல், கண்களில் வீக்கம் மற்றும் சிவப்பு, மூக்கைச் சுற்றிய பகுதிகளில் கருப்பு நிற புள்ளிகள் தோன்றல், கண்களில் வீக்கம், தலைவலி, மூச்சுத்திணறல், இரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

இது வராமல் தடுக்க, முக கவசம் அணிதல், நோயெதிர்ப்புச் சக்தியை பேணுதல், நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்தல், கூடுமானவரை ஸ்டீராய்டு மருந்துகளைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அரசாங்கமும் மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

  • சந்தீப் குமார்

Leave a Reply

Your email address will not be published.