ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தக் கூடாது என்ற புதிய தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. குழந்தைகள் சமூக வலைத்தளங்களால் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்தத் தடையை அமல்படுத்தியதாக ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்தை பாதுகாப்பாக வழங்க வேண்டியது எங்கள் கடமை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடக பயன்பாட்டால் குழந்தைகளின் மனநலம், கல்வி, நடத்தையில் மாற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருவதாக அரசு கூறுகிறது.இந்தத் தடையின் கீழ் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்டாக், ஸ்நாப்சாட், எக்ஸ், ரெடிட், ட்விட்ச், கிக், த்ரெட்ஸ் போன்ற முக்கிய சமூக வலைத்தளங்களுக்குச் சிறுவர்கள் அணுக முடியாது. குழந்தைகள் ஆன்லைன் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு விளக்கமளித்துள்ளது. 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டை முழுமையாகத் தடைசெய்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.

