அயோத்தியில் ராமர் கோயிலை சுற்றியுள்ள 15 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு விநியோகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் உணவு விநியோக தளங்கள் மூலம் அசைவ உணவு மற்றும் மதுபானங்கள் வழங்கப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ராமர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதி ‘பஞ்ச்கோசி பரிக்ரமா’ என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் ஏற்கனவே மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை இருந்தது. ஆனால் அந்தத் தடையை மீறி, சில ஹோட்டல்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் அசைவ உணவுகள் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் வழியிலான அசைவ உணவு விநியோகத்தையும் முழுமையாகத் தடை செய்வதாக அயோத்தி மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த உத்தரவு அனைத்து ஹோட்டல்கள், கடைகள் மற்றும் விநியோக நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தடையை முறையாக அமல்படுத்த தொடர் கண்காணிப்பு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

