நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் அறிவிப்பு; நாளை ஜூலை 9ம் தேதி இப்போராட்டம் நடைபெறுகிறது

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் போராட்டம்/ கலவரம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பேருந்துகள் ஆட்டோக்கள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு திமுகவின் தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., உள்ளிட்ட 13 தொழிற்சங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆளுங்கட்சியான திமுகவின் தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பேருந்துகள் நாளை இயக்கப்படாது எனத் தெரிகிறது.
அதேநேரம், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. எனவே, அந்த தொழிற்சங்க பணியாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வருவார்கள். இதனால், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சி.ஐ.டி.யு.வில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் அங்கம் வகிப்பதால் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்பில்லை. வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவிக்காததால், கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும். நாடு தழுவிய இந்த போராட்டத்தில் வங்கித் துறையும், காப்பீட்டு துறையும் இணைவதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *