மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இதுகுறித்த அறிவிப்பை அவர்கள் இணைந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். நீண்ட நேர ஆலோசனைகளுக்குப் பிறகு, தங்களின் இல்லற வாழ்வை முடித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸுக்கும், மெலிண்டாவுக்கும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடத்தி வந்த “பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்” உலகம் முழுவதும் நோய் தடுப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி திட்டங்களுக்கு நிதியுதவி செய்து முக்கியமான அறப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு செய்யப்பட்ட விவாகரத்து ஒப்பந்தத்தின் படி, மெலிண்டாவுக்கு மொத்தமாக ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சம் வழங்க பில்கேட்ஸ் ஒப்புக்கொண்டார். இதற்கு முன் ரூ.41,700 கோடி வழங்கப்பட்ட நிலையில், தற்போது இறுதியாக ரூ.71,100 கோடியை அவர் வழங்கியுள்ளார். மெலிண்டா, தமக்கு கிடைத்த ஜீவனாம்சத் தொகையின் பெரும்பகுதியை “பிவொட்டல் பிலாந்த்ரபீஸ்” என்ற தனது அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றம், சமூக வளர்ச்சி போன்ற பணிகளில் தொடர்ந்து செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

