கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதி தீவிரமாய் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருப்பது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கான மாதிரிகளைச் சோதிக்கும் சென்னையைச் சேர்ந்த மெடால் லேப் என்னும் ஆய்வகம், மற்ற மாநிலத்தில் இருந்து வந்த மாதிரிகளின் எண்ணிக்கை மற்றும் நெகட்டிவ் வந்தவர்களுக்கு பாசிட்டிவ் என காட்டிய எண்ணிக்கை என தமிழகத்தின் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையைப் போலியாக அளித்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வகமானது கொல்கத்தா மற்றும் கேரளா ஆகிய நகரங்களிலிருந்து வந்த பாசிட்டிவ் மாதிரிகளை தமிழகத்தின் எண்ணிக்கையில் காட்டியதோட 4000 நெகட்டிவ் மாதிரிகளையும் பாசிட்டிவ் எண்ணிக்கையில் சேர்த்திருப்பதாய் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையில் மாறுதல் ஏற்பட்டதோடு சரியான நோயாளிகளுக்குக் கிடைக்க வேண்டிய உரிய சிகிச்சை, மத்திய மாநில அரசுகளின் ஆக்சிஜன் மற்றும் இதர ஒதுக்கீடுகளின் கணக்கு ஆகியனவற்றில் பாதிப்பும் தடங்கலும் ஏற்பட்டிருப்பதாய் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வகத்திற்கு தனியார் மருத்துவமனைகளுடன் தொடர்பிருக்கலாம் என்றும், அவர்களின் தூண்டுதலின் பேரிலியே இத்தகைய செயலை இந்த ஆய்வகம் புரிந்திருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை சந்தேகம் எழுப்பியுள்ளது.
இது குறித்து மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறும் கூறி அந்த ஆய்வகத்திற்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. மேலும் கொரோனா மாதிரிகளை அங்கு சோதிப்பதற்காக வழங்கப்பட்ட உரிமையையும் ரத்து செய்து ஆணை வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் பல இன்னல்களை மக்கள் சந்தித்து வரும் இந்நிலையில் சுயநலமாய் பேராசையுடன் செயல்படும் இது போன்ற நிறுவனங்கள் தங்களுக்கிருக்கும் சமூக பொறுப்பை மறந்து செயல்படுவதுடன், இரக்கமற்ற மனநிலையில் செயல்படுவது கடும் அயர்ச்சியை அளிப்பதாய் இருக்கிறது.