கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட் கொடுந்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் அதன் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதிலும் தமிழகத்தில் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் இதர உபகரணங்களுக்கு தீவிர நெருக்கடி நிலவி வருகிறது. இதைப் போக்க அரசாங்கம் அனைவரையும் தாராளமாக நிதியளித்து உதவுமாறு பணித்திருந்த நிலையில் அமெரிக்க வாழ் தமிழ் மருத்துவ நிபுணரான திரு.ராஜேஷ் ரங்கசாமி தன் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து 48 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி அளித்திருப்பது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
ஆர்டர் கார்ப்பரேஷன் என்னும் தங்கள் அறக்கட்டளை மூலமாக திரட்டிய நிதியில் கோவை மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கட்டமைப்பு உபகரணங்களை வாங்கி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, அவர் 1992 ஆம் ஆண்டு கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்ததாகவும், பின்னர் மேற்படிப்பு முடித்து தற்போது அமெரிக்காவின் ரினோ நகரில் உள்ள மருத்துவமனையில் மூளை மற்றும் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வருவதாகவும், அவரது மனைவி அங்கிருக்கும் நவேடா பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாப் பணி புரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேற்கொண்டு, கோவை மருத்துவமனைகளில் இருக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தன் அத்தை மற்றும் நண்பர் மூலமாய் அறிந்ததாகவும், உடனே தன் அறக்கட்டளை மூலமாய் நிதி திரட்டும் ஆலோசனையை தன் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து செயல்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்த நிதியை தெரிந்த நண்பர்கள் மற்றும் அறிமுகமான நபர்களிடம், தொலைபேசி, வாட்சப் குறுந்தகவல் மற்றும் சமூக வலைதளம் மூலமாகவே தொடர்பு கொண்டு திரட்டியதாய் அவர் தெரிவித்தார்.
அவர் திரட்டிக் கொடுத்த நிதியில் கோவை அரசு மருத்துவமனைக்கு 51 லட்சம் மதிப்பில் நிமிடத்திற்கு 200லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி ஆகும் அளவுக்கான கட்டமைப்பும், 5 லட்சம் மதிப்பில் 5 கான்சென்ட்ரேட்டர்களும், இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 27 லட்சம் மதிப்பில் நிமிடத்திற்கு 100லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி ஆகும் அளவுக்கான கட்டமைப்பும், 3 லட்சம் மதிப்பில் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சேவையை தேவையைப் புரிந்து அளித்து உதவிய அமெரிக்க வாழ் தமிழ் மருத்துவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்களும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.