மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கிடையேயான மோதலால், உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கத்தார், சவுதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் மீது தாக்குதல் நடந்ததால் தினசரி கோடிக்கணக்கான பேரல் எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது.இந்த நிலை உலக பொருளாதாரத்தையும் பாதித்து, பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. பங்குச்சந்தைகள் சரிவு கண்டுள்ளதுடன், இந்திய ரூபாய் மதிப்பும் குறைந்துள்ளது. அமெரிக்காவில் பெட்ரோல் விலையும் உயர்ந்துள்ளது. அவசரமாக கையிருப்பு எண்ணெய் வெளியிடப்பட்டாலும் இது தற்காலிக நிவாரணம் மட்டுமே என நிபுணர்கள் கூறுகின்றனர். ஹார்முஸ் ஜலசந்தி நீண்ட நாட்கள் மூடப்பட்டால், எண்ணெய் விலை மேலும் அதிகரித்து உலக பொருளாதாரம் மந்தநிலைக்கு செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

