ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளில் புதிய மாற்றங்கள்!

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம் பெறுவதைத் தடுக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் புதிய விதிகள் தொடர்பான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.புதிய விதிகளின்படி, முகவரி மற்றும் வயதுச் சான்றாக வழக்கறிஞர்களிடம் பெறப்படும் உறுதிமொழிப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு வெவ்வேறு வண்ணங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.அதேபோல், இணையவழி ஓட்டுநர் பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. ஓட்டுநர் உரிமத்தில் ரத்த வகை, செல்போன் எண் மற்றும் அவசர காலத்தில் தொடர்புகொள்ள வேண்டிய நபரின் விவரங்கள் இடம்பெறுவதும் கட்டாயமாக்கப்பட உள்ளது. ஆதார் சரிபார்ப்பின் மூலம் முகவரியை மாற்றும் சேவைகளுக்கான கட்டணத்தையும் ரத்து செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், ஓட்டுநர் உரிமம் தொடர்பான திருத்தக் கோரிக்கைகளை அதிகாரிகள் 15 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்றும், 30 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படாத விண்ணப்பங்களுக்கு உரிய தீர்வு காணும் வகையில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், போலி ஆவணங்கள் மூலம் உரிமம் பெறுவதைக் கட்டுப்படுத்தவும், விண்ணப்பதாரர்களுக்கான சேவைகளை விரைவுபடுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *