துணை ஜனாதிபதி பதவிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எம்பிக்கள் ரகசிய முறையில் வாக்குகளை செலுத்துவார்கள். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக்குறைவை காரணமாகக் கொண்டு துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் 17வது துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவின் ஆளுநரும், தமிழ்நாட்டை சேர்ந்த பாஜ மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். துணைஜனாதிபதி தேர்தலில், மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 781 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 392 வாக்குகள் தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 427 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், அதன் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், ரகசிய வாக்கெடுப்பு என்பதால், இறுதி முடிவுகள் எதிர்பார்ப்புகளை மாற்றியமைக்கக் கூடும் என்பதால் யார் அடுத்த துணை ஜனாதிபதிஎன்று எதிர்பார்க்கபடுகிறது.

